கொரோனாவால் வரும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி
உளவியல் ஆலோசகர் முனைவர் துரை. சிவப்பிரகாசம்
ஈரோடு. கைபேசி : 9442135600.
கொரோனா வைரஸால் உலகெங்கும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பலரும் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களின் மனம் எப்போதும் கவலையிலேயே மூழ்கி இருக்கிறது. முன்பு விரும்பிச் செய்து வந்த செயல்களில் கூட தற்போது எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றனர். அளவிட முடியாத சோர்வுடன் உள்ளனர். பசியின்மையால் பிடித்தமான உணவுகளைக் கூட வேண்டாம் என்று புறக்கணிக்கின்றனர். போதிய தூக்கம் இல்லாமல் அவதிப் படுகின்றனர். எப்போதும் வரும் வருமானம் இல்லாததால் அதைப் பற்றி மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்து விட்டது. இது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த மன அழுத்தம் வேறு பல நோய்களையும் கொண்டு வரும். எனவே கொரோனா நோய் பரவலினால் வரும் மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும்.
கொரோனா வைரஸ் நோய் என்பது மற்ற டைபாய்டு, நிமோனியா போன்ற நோய்களைப் போன்றது தான். எப்படி அந்த நோய்களிலிருந்து வெளி வந்தோமோ அதே போல கொரோனா வைரஸ் நோயிலிருந்தும் வெளி வந்து விடலாம். இதற்கு மருந்தை விட மனோபலம் தான் முக்கியம்.
கொரோனா தொற்று பரவுவதைப் பற்றி தொலைக்காட்சி செய்திகள் வந்து கொண்டே இருப்பதால் அதைப் பார்த்தும் பலருக்கு மன அழுத்தம் அதிகமாகிறது. ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்ட பலரை இந்த செய்திகள் இன்னும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாக்கும். எனவே கொரோனா வைரஸ் பரவலைக் குறித்த செய்திகளை அதிகமாக பார்ப்பதையும், படிப்பதையும் தவிர்க்க வேண்டும். அடிப்படையான செய்திகளை மட்டும் அறிந்து கொள்ள வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் ஆகியவற்றைப் பார்க்கவோ, படிக்கவோ கூடாது. சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடாமல் விலகி இருக்க வேண்டும். முக்கியமாக வாட்ஸ்அப் மூலமாக வரும் தகவல்களை அப்படியே நம்பக் கூடாது. அரசு வெளியிடும் தகவல்களை மட்டும் நம்ப வேண்டும்.
வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணத்தை முன்னிட்டு வெளியே செல்ல நேர்ந்தால், எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்து செல்வது மிகவும் முக்கியம். வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் கால்களை சுத்தமாக் கழுவி விட்டு, கைகளையும் கிருமி நாசினி மூலம் சுத்தப் படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போதும், அடிக்கடி சானிடைசர் அல்லது சோப் மூலமாக கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மனநிலை நிச்சயம் வரும். கொரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என்ற நம்பிக்கை வரும். இதனாலும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வீட்டிலுள்ள அனைவரிடமும் நன்றாக உரையாட வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியவர்களுடன் அலைபேசி மூலமாக உரையாட வேண்டும். அப்படி உரையாடும்போது கொரோனா வைரஸ் குறித்துத் தேவையில்லாமல் பேசக் கூடாது. வீட்டில் இருப்பவர்களுடன் செஸ், கேரம் போர்டு, தாயம் மற்றும் பல்லாங்குழி என மூளைக்கு ஆற்றலை தரும் பலவித விளையாட்டுகளை விளையாடலாம். நீண்ட நாட்களாக முடிக்கப் படாமல் இருக்கும் வேலைகளை முடிக்கலாம்.
காலையிலும், மாலையிலும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது தவிர உடற் பயிற்சிகள் செய்து வர வேண்டும். மிக முக்கியமாக யோகா, பிரணாயாமம் மற்றும் தியானம் செய்து வந்தால் மன அழுத்தம் ஓடிவிடும். கொரோனா வைரஸ் நோய் கட்டுப் படுத்தப்பட்ட பிறகு என்ன ஆகுமோ, எதிர்காலம் எப்படி இருக்குமோ என்றெல்லாம் நினைத்து கவலைப்படக் கூடாது. எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மன உறுதி வேண்டும்.
கண் பரிசோதனை, பற்கள் பரிசோதனை போன்ற பரிசோதனைகளையும் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த அளவு பரிசோதனைகளையும் தள்ளிப் போட வேண்டும். சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் ஆகியவற்றைப் பற்றியோ வேறு நோய்களைப் பற்றியோ நினைத்துக் கவலைப்படக் கூடாது. மிக முக்கியமாக, நமக்குக் கொரோனா வைரஸ் வந்து விடுமோ என்ற பயம் நிச்சயமாக இருக்கக் கூடாது.
சரியான நேரத்தில் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக, எந்தெந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டுமோ, அந்தந்த உணவு வகைகளை நேரம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். எப்போதும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். வெளி உணவுகள், குளிர்ச்சியான குளிர் பானங்கள், குளிர் சாதனப் பெட்டியில் வைத்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இரவு உணவை சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு, வீட்டிலிருந்தவாறே வெளியே பார்த்து இயற்கையை ரசிக்க வேண்டும். இரவில் சந்திரனின் ஒளியைப் பார்த்து மகிழ வேண்டும். சரியான நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். உறங்குவதற்கு முன்பு கணினியில் வேலை செய்வது, தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் அலைபேசியில் உரையாடுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உறங்குவதற்கு முன்பு பிடித்த இசையை கேட்டுக் கொண்டே இருந்தால் தூக்கம் தானாக வந்து விடும்.
மேற்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் குறித்த எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நாம் எப்போதும் நலமுடன் இருப்போம் என்ற நேர்மறை எண்ணங்களை வளர்த்து வந்தால், கொரோனா வைரஸ் குறித்த மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது மிகவும் நிச்சயம்!!