போதிய அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் என்ன ஆகும்
ஒருவர் உணவு உண்ணாமல் கூட சில வாரங்கள் உயிர் வாழலாம். ஆனால் தண்ணீர் அருந்தாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதை விட தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். ஒருவருடைய பாலினம், வயது, எடை ஆகியவற்றிற்குத் தகுந்தவாறு ஒருவர் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பது கணக்கிடப் படுகிறது. சராசரியாக மனித உடலானது 50 - 70 % தண்ணீரால் ஆனது. தண்ணீர், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு மட்டும் தேவையானது அல்ல. உடல் உறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும், உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ளவும், தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மேலும் மூட்டுகள் வலுவாக இருக்கவும், கண்கள் தெளிவாகத் தெரியவும், தண்ணீர் அவசியம்.
உடலிலிருந்து வியர்வை, சிறுநீர், மலம் ஆகியவை வெளியேறும் போதும், மூச்சை வெளியிடும் போதும், உடலிலிருந்து நீர் வெளியேறுகிறது. அப்போது உடலில் வறட்சி ஏற்படும். போதிய அளவு நீரில்லாமல் உடல் வறட்சியுடன் இருந்தால் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். தண்ணீர் அருந்திய சில நிமிடங்களிலேயே அதிக தாகம் ஏற்பட்டால் அது நீர் வறட்சியை வெளிக்காட்டும் ஒரு முக்கிய அறிகுறியாகும். இது மட்டுமல்லாமல் நாக்கு, உதடு போன்றவை வறட்சியுடன் இருந்தால் போதிய அளவு நீர்ச்சத்து இல்லை என்று அறியலாம். ஒருவர் போதிய அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் பல பிரச்சனைகள் தோன்றும். பல நோய்களும் உருவாகும்.
போதிய அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. அப்போது மூளையில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்க ஆரம்பித்து ஒற்றைத் தலைவலி வரும். நீர்ச்சத்து குறையும் போது ஒருசிலருக்கு ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் அல்லது தலைச் சுற்றல் வரும். முக்கியமாக திடீரென்று உட்கார்ந்து எழும் போதும் அல்லது உட்காரும் போதும் தலைச் சுற்றல் ஏற்படும். சிறுநீர் கழிப்பது குறைந்து, சிறுநீரகம் பாதிக்கப்படும். மலச்சிக்கல் ஏற்படும். இரத்தத்தின் அடர்த்தி குறைந்து, இதயத்திலிருந்து உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் ரத்தம் அனுப்புவதில் சிரமம் ஏற்படும். அப்போது இதயம் அளவுக்கு அதிகமான வேலையில் ஈடுபட வேண்டியிருக்கும். இதனால் இதயத் துடிப்பு ஒரு சில நேரங்களில் குறைவாகவும், ஒரு சில நேரங்களில் அதிகமாகவும் இருக்கும். முடிவில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, இதய நோய் ஏற்படும். இதயம் அளவுக்கு அதிகமான வேலையில் ஈடுபடும் போது, உடல் எளிதில் சோர்வடையும். உடல் சோர்வினால் சாதாரணமாக மேற்கொள்ளும் அன்றாட பணிகளைக் கூட செய்ய இயலாது. இது மட்டுமல்லாமல் மன நலமும் பாதிக்கப்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலை ஏற்படும். மன நிலையில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டு மன நோய் உருவாகும்.
ஒருவர் , ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற சந்தேகம் எழலாம். நாம் உண்ணும் உணவிலிருந்தே ஒரு நாளில், நம் உடலுக்குத் தேவையான 25 சதவிகிதம் தண்ணீர் கிடைக்கிறது. ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு தான் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற எந்த ஒரு அளவும் இல்லை. காலநிலை, வயது, உடற்கூறு, ஒருவருக்கு இருக்கும் நோய்கள், அந்த நோய்களின் பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து, ஒருவர், ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற அளவு மாறுபடும். கைக்குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மூலமாகவே உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்து விடும். ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும். 3 - 5 வயதுள்ள குழந்தைகளுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும். 6 - 10 வயதுள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் தினமும் ஒன்றரை லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். 11 - 20 வயது உள்ளவர்கள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தலாம். 20 வயதிற்கு மேற்பட்டோர் சராசரியாக நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.
விளையாடும் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தேவைக்கேற்ப தண்ணீர் அருந்துவதை அதிகப் படுத்திக் கொள்ளலாம். வயதானவர்கள் தாகம் எடுக்கும்போது தான் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது உடலின் தேவைக்கேற்ப தண்ணீர் அருந்தி வரவேண்டும். இவ்வாறு உடலுக்குத் தேவையான தண்ணீர் அருந்தி வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்த ஓட்டம் சீராக இருப்பதால், இதயம் நன்கு செயல்படும். இதய நோய் வராது. மேலும் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற நோய்களும் தாக்காது. சிறுநீரகச் செயல்பாடு மேம்படும். மலச்சிக்கல் தவிர்க்கப்படும். செரிமானம் எளிதாகும். தசை இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும். உடலின் அமிலத் தன்மை கட்டுக்குள் வரும். தலைசுற்றல், படபடப்பு, உடற் சோர்வு மற்றும் மனச் சோர்வு ஆகியவை நீங்கும். உடல் வெப்பம் எப்போதும் கட்டுக்குள் இருக்கும். உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் மனநலமும் நன்கு பேணப்படும்.
- முனைவர் துரை. சிவப்பிரகாசம், உளவியல் ஆலோசகர், ஈரோடு. கைபேசி : 9442135600.
இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தொடர்ந்து படிக்க "ஹெல்த் டுடே" மாத இதழை Subscribe செய்யுங்க. ஒரு வருஷத்துக்கு சந்தா, ஜஸ்ட் ரூபாய் 360/- மட்டுமே (தபால் செலவு உள்பட). தொடர்புக்கு: 63819 63636/ 94441 31213.