மரு மற்றும் ஆணிகளுக்கான எளிய தீர்வுகள்
மனித பாபிலோமா (human papilloma) என்னும் வைரஸால் மருக்கள் உண்டாகின்றன. மருக்கள் சிறியதாக சதை புடைத்து கால் பாதம் அல்லது கை விரல்களில் ஏற்படுகின்றன. இருவருக்கு இடையே ஏற்படும் ஒரு சாதாரண தொடர்பால் கூட இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றும் என்கிறார்கள். அனால் இவற்றை சில மாதங்களிலேயே நம்மால் எளிதாக குணப்படுத்த முடியும்.
சில சமயங்களில் மருக்கள் வேகமாக வளர வாய்ப்பு இருப்பதால் அவற்றை முறையாக கவனிக்க வேண்டும். குறைந்த நோய் எதிர்ப்பு அமைப்பால் மருக்கள் ஏற்படுகின்றன. கணக்கில்லாத வகையான மருக்கள் இருந்தாலும், உங்கள் பாதங்களில் ஏற்படும் மருக்களின் பெயர் பால்பர் மருக்கள். கால் பாதங்களின் அடிப்பாகத்தில் உண்டாகும் கடினமான, தடித்த தோல் பகுதி ஆணி என கூறப்படுகிறது. ஆணிகள் பெரும்பாலும் ஒருவிதமான வெளிப்புற அழுத்தத்தால் கால் விரல்களுக்கு நடுவிலோ அல்லது அவற்றை சுற்றியோ ஏற்படுகிறது. கால் விரல்களுக்கு ஏற்படும் தொடர் அழுத்தமே இதற்கு காரணமாகும். வெகு நேரம் நிற்பது, மிக இறுக்கமான காலணிகளை அணிவது, காலுறை அணியாமல் ஷூ போடுவது, அதிக உயரமான குதிகால் பகுதியுடைய செருப்பு அணிவது போன்றவை கால் பாதத்தின் அடி பகுதி மற்றும், கால் விரல்களுக்கு மிகுந்த அழுத்தத்தை தரக் கூடியவை ஆகும்.
மருக்கள் மற்றும் ஆணிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை இரண்டும் வெவ்வேறு விதமாக கையாள வேண்டிய வேறுபட்ட பிரச்சனைகள் ஆகும்.
அறிகுறிகள்
- ஆணிகள் உங்கள் கால் விரல்களில் மிக தடித்த, கடினமான தோல் அடுக்காக காட்சியளிக்கும்.
- அவற்றை அழுத்தினால் வலிக்கும்.
- நடக்கும் பொழுது, நிற்கும் பொழுது ஆணிகள் வலி ஏற்படுத்தும்.
- பாதிக்கப்பட்ட பகுதி மிக வறட்சியாக இருக்கும்.
- மருக்கள் மிகச்சிறிய அளவு சதை புடைத்து இருப்பது போல் சிறு உருண்டைகளாக இருக்கும்.
- அவை பெரும்பாலும் கைகள் அல்லது முகத்தில் ஏற்படும்.
- மிகச்சிறிய தோல் உருண்டைகளான மருக்கள் இளஞ்சிவப்பு அல்லது அடர்ந்த நிறத்தில் இருக்கும்.
சிகிச்சை முறைகள்:
மருக்கள்
1) கற்றாழை / ஆலோவெரா
கற்றாழையுனுள் இருக்கும் கெட்டி திரவ பகுதியை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் ஒரு பஞ்சு உருண்டையால் தடவி, அதன் மேல் ஒரு பிளாஸ்திரி அல்லது டேப் வைத்து கட்டி விடவும். சிறிது நேரம் கழித்து அந்த பஞ்சை எடுத்து விடவும். இம்முறையை தினமும் இரு முறை ஒரு வாரத்திற்கு பின்பற்றவும். கற்றாழையில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி தன்மை மருக்களை குணப்படுத்த உதவுகிறது.
2) பூண்டு
பூண்டில், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை நிறைந்து இருக்கிறது. அதனால் மருக்களை குணப்படுத்த முடிகிறது. ஒரு பல் பூண்டை மரு மீது வைத்து அதன் மேல் ஒரு துணி அல்லது டேப் வைத்து கட்டி 20 நிமிடங்கள் வைத்து இருக்கவும். இதை தினமும் இருமுறை மூலம் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்யவும். தானாகவே மரு உதிர்ந்து விடும்.
3) ஆப்பிள் சிடர் வினிகர்
மற்றொரு வீரியமான பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட, மருக்களை குணப்படுத்தக்கூடியது ஆப்பிள் சிடர் வினிகர். இரண்டு தேக்கரண்டி இந்த வினிகரை ஒரு தேக்கரண்டி தண்ணீருடன் கலந்து மருவின் மீது பஞ்சில் நினைத்து தடவவும். பஞ்சை அவ்விடத்தின் மேல் வைத்து ஒரு துணி அல்லது பேண்டேஜால் கட்டவும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். இவ்வாறு செய்வதன் மூலம் மருக்கள் சில நாட்களில் கருகி தானாக உதிர்ந்து விடும். இம்முறையை ஒரு வாரத்திற்கு பின்பற்றவும்.
ஆணிகள்
1) ப்ரெட்
ஒரு துண்டு பிரெட்டை வினிகரில் ஊற வைத்து ஆணியின் மீது வைக்கவும். ஊறிய ப்ரெட் துண்டை பாதிக்கப்பட்ட பகுதியில் ஓட்டுமாறு வைத்து காலில் சாக்ஸ் அணியவும். அல்லது ஒரு துணி வைத்து கட்டி கொள்ளவும். ஓர் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். இது தோலை மிருதுவாக்கி ஆணியை ஒரே இரவில் குணமாக்கி விடும்.
2) எலுமிச்சை
வைட்டமின் C நிறைந்துள்ள எலுமிச்சை, ஆணியை குணமாக்க உதவுகிறது. ஒரு எலுமிச்சை துண்டை ஆணி மீது தடவவும். அதன் மேல் பருத்தி சாக்ஸ் அணிந்து கொண்டு இரவு முழுவதும் வைத்திருக்கவும். எலுமிச்சையிலுள்ள சிட்ரிக் அமிலம் தோலை மிருதுவாக்கி இயற்கையாக ஆணியை குணப்படுத்துகிறது.
3) வெங்காயம்
ஒரு கப் வினிகரில் ஒரு துண்டு வெங்காயத்தை முக்கவும். அதை ஆணி மீது வைக்கவும். சில நிமிடங்கள் வைத்து இருக்கவும். அல்லது அதன் மேல் ஒரு துணியால் கட்டு போட்டு இரவு முழுவதும் வைத்து இருக்கவும். மறுநாள் காலை தோல் மிருதுவாகவில்லை என்றால் இம்முறையை ஒரு அல்லது இரு வாரத்திற்கு தோல் மிருதுவாகும் வரை பின்பற்றவும்.