ஆரோக்கியமாக மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா
-M. ஞானசேகர், Mob: 95662 53929
இன்று எங்கு பார்த்தாலும் நோய்கள், விபத்துக்கள், சுத்தமின்மை என மக்கள் வருந்தும் சூழ்நிலை உள்ளது. மக்கள் தொகையும் அதிகமாகி வரும் இச்சூழலில், அனைவரும் விரும்புவது நோயற்ற, ஆரோக்கியமான, இளமையான, நீண்ட நாள் வாழ்க்கை, அதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
உணவு: உணவு என்றாலே நமக்குத் தெரிந்தது சாதம் தான். இது தவறு, நமது உணவை 3 பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம், மற்றொரு பாகம் காய்கறிகள், இன்னோரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும். அதற்காக நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை.
உடற்பயிற்சி: வீட்டில் இருந்தபடியே செய்ய முடிந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முதல், இரண்டு நாள் செய்வதற்கு தயக்கமாக இருக்கும். இரண்டு, மூன்று நாட்களை தாண்டி விட்டீர்கள் என்றால் உங்களுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இருக்கமாக்குகிறது.
தியானம்: தினமும் அரைமணி நேரம் தியானம் செய்ய வேண்டும் காலையில் எழுந்ததும் கண்ணை மூடி உட்கார்ந்து, முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பது கூட தியானம்தான். என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முகத்தில் சுருக்கம் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகி விட்டதோ என்று அடிக்கடி கண்ணாடிகளை பார்ப்பவர்களும் உண்டு.
உணவு கட்டுப்பாடு: நாளொன்றுக்கு ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறி சாறு உட்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு. கேரட், ஆரஞ்சு போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ரெடிமேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். மீன் உணவுகளை அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி 3 முதல் 6 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ்: முதுமையை தவிர்ப்பதில் ஆன்டி ஆக்சிடென்ட்க்கு முக்கிய பங்கு உண்டு. நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றை உண்பதன் மூலம் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இளமையைத் தக்க வைக்கிறது. இது நன்றாக செயல்புரிந்து முதுமை வராமல் தடுக்கிறது.
சோப் மற்றும் கிரீம்கள்: முகச்சுருக்கத்தை போக்கவும் தோலை பாதுகாக்கவும் எளிய வழிகள் உள்ளன. ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் சோப் மற்றும் இளமையைக் கூட்டும் கிரீம் போன்றவைகளை உபயோகிக்க வேண்டும். கூடுமான வரை சூரிய ஒளி நம் உடல் அதிக அளவில் படுவதை தவிர்க்க வேண்டும். இதனாலும் முகச்சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவு சன்ஸ்கிரீம் தடவாமல் வெளியில் செல்ல வேண்டாம்.
கவலையை துரத்துங்கள்: சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மனம் சரியில்லை என்றால் எதை செய்தாலும் இளமைவராது. உடலில் ஒரு வித களைப்பு தெரியும், முதிர்வு வந்துவிடும். ஆனால், இன்றைய உலக சூழ்நிலையில் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். மகிழ்ச்சியான நினைவே நமது உடலின் நல்ல ஆரோக்கியமான ஹார்மோனை சுரக்கச் செய்யும். மனதை அமைதியாகவும், இசை மற்றும் நல்ல புத்தகங்கள் படிப்பது போன்ற பழக்கங்களை பழக்கப்படுத்திக் கொண்டால் உங்கள் இளமை நீடிக்கும்.