மனம் வைத்தால் மாரடைப்பைக் கூட தடுக்கலாம்
நம் நாட்டில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பு நோய் தான் முக்கிய காரணம். அந்தக் காலத்தில் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு நோய் வந்தது. ஆனால், தற்போது இளம் வயதுக்காரர்களுக்கு மாரடைப்பு வந்துவிடுகிறது. இந்த நோய் ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பார்க்காமல் அனைவரையும் தாக்குகிறது.
ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பின் போதும் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சக்தியையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை ரத்தக்குழாய்கள் மூலம் அனுப்புகிறது.
இந்த குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு, முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் உருவாகின்றன. ஒரு சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுவதுமாக அடைத்து விடுகிறது. இதனால், இதயத்தின் தசைப்பகுதிக்கு சக்தியும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் இதயம் செயலிழக்கிறது இதுவே மாரடைப்பு ஆகும்.
பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. புகைப்பிடித்தல், கெட்ட கொழுப்பு அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ளுதல், உடலின் அதிக எடை, போதைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள். வயது முதிர்வு, பரம்பரையாக வரும் மரபு தன்மை ஆகியவை கட்டுப்படுத்த முடியாத காரணங்கள்.
மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பொதுவாக மாரடைப்பு ஏற்படும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பிறகு அந்த வலி படிப்படியாக அதிகரிக்கலாம். இந்த வலி, நெஞ்சின் நடுப்பகுதியில் வரும் பிறகு இந்த வலி இரு தோள்களுக்கும் முக்கியமாக இடது தோளுக்கு பரவும். பிறகு கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் பரவலாம். இந்த வலி தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்து, உடலெங்கும் திடீர் வியர்வை, மூச்சுத் திணறல், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், அதிகமான நாடித்துடிப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால் அதுவே மாரடைப்பு ஆகும். ஒரு சிலருக்கு இது போன்ற எந்த அறிகுறிகளும் இல்லாமல் மாரடைப்பு வரலாம். மாரடைப்பை தகுதியான மருத்துவர்தான் உறுதி செய்ய வேண்டும்.
புகை மற்றும் போதைப் பழக்கங்களை விட்டுவிடுதல், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்ளாமல் இருத்தல், உடலின் எடையை குறைத்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை கட்டுக்குள் வைத்திருத்தல், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை நிச்சயமாக தடுக்கலாம். அனைத்திற்கும் மேலாக மன அழுத்தம் ஏற்படாமல் இருந்தால் நிச்சயமாக மாரடைப்பை தடுத்துவிடலாம்.
தீபக் சோப்ரா என்ற அமெரிக்கர், இந்தியாவில் பிறந்து அமெரிக்கா சென்றவர். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, மனத்தின் சக்தியை நன்கு அறிந்தவர். இவர் உட்பட பல்வேறு உளவியல் நிபுணர்கள், மனம் நினைத்தால் மாரடைப்பை தடுத்துவிடலாம் என்று கூறியுள்ளனர். மனம் அவ்வளவு அற்புதமான சக்தி வாய்ந்தது. ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தாலும் தனக்கு ஒன்றும் இல்லை என்று கவலைப்படாமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படாது என்பது மிகவும் நிச்சயம்
-முனைவர் துரை சிவப்பிரகாசம், உளவியல் ஆலோசகர், ஈரோடு | M: 94421 35600