நன்றாகத் தூங்கி உங்கள் மூளையின் சிறப்பான செயல்பாட்டால் வெற்றி வாகை சூடுங்கள்
நம் உடல், மனம் இரண்டையும் ஒருங்கிணைப்பதற்கு நிச்சயம் நல்ல ஆரோக்கியமான தூக்கம்.
தேவையான நேரம் தூங்காவிட்டால் ஏராளமான ஆரோக்கியச் சீர்கேடுகள் நம்மைத் துன்புறுத்தும். நம்மால் தீர்மானமாகச் செயல்பட முடியாது. தேவையில்லாத எரிச்சலும், அசதியும் மிஞ்சும். வேளையில் தீர்க்கமாகச் சிந்தித்து எந்த முடிவையும் எடுக்க முடியாது.
தினசரி சரியான நேரத்தில் தூங்கி, தேவையான அளவு ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் மறுநாள் எழுந்து அன்றாட பணிகளைச் சுறுசுறுப்பாகச் செய்வதை ஆங்கிலத்தில் 'ஸர்காடியன் ரிதம் (Circadian Rhythm) என்பார்கள்.
கீழ் குறிப்பிட்டுள்ள சில சுலபமான செயல்களை தினமும் செய்வதின் மூலம் மருந்தோ / மதுவோ இல்லாமல் நம்மால் நன்றாகத் தூங்கி இந்த 'ஸர்காடியன் ரிதம்' என்ற மிக முக்கியமான இசைவை நிகழ்த்த முடியும்.
- தூங்கும் இடம் கும்மிருட்டாக இருக்க வேண்டும்
தூங்கும் முன் மொபைல் போன் / லேப்டாப் போன்ற எந்தவிதமான எலெக்ட்ரானிக் உபகரணத்தையும் உபயோகிக்க வேண்டாம். இவற்றிலிருந்து வரும் வெளிச்சம் நம்முடலில் மெலடோனின் (Melatonin) என்ற ஹார்மோன் உற்பத்தியாவதற்கு இடைஞ்சலாக இருக்கும். மெலடோனின் நம்முடைய தூக்கம் / விழிப்புணர்வு ஆகியவற்றை சரியான முறையில் கட்டுப்படுத்தும். ஒவ்வொரு முறையும் நாம் இந்த செயற்கையான வெளிச்சத்தைப் பார்க்கும்போதும் அந்த நிறமாலையிலிருந்து வரும் நீல நிறம், நாமறியாமல் நம் மூளைக்கு உதய நேரம் வந்துவிட்டதைத் தவறாக உணர்த்தும். இப்போது வரும் சில நவீன அலைபேசிகள் இந்த நீல நிற வெளிச்சத்தை வடிகட்டுகின்றன (Blue Light Filters) என்றாலும் அது சரிவர நடைபெறாத காரணத்தினால் நம் மூளை குழம்புவதற்கான வாய்ப்புகள் நிறைய. தூங்கி எழும் நேரம் அந்த அறையினுள் (பெட்ரூம்) நிறைய இயற்கையான வெளிச்சம் வரும்வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த மெலடோனின் ஹார்மோன் சரியான முறையில் சுரந்து நம் மூளையை சுறுசுறுப்பாக்கும்.
- தூங்கும் முன்மொபைல் போன் / லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் உபகரணங்களை அருகே வைத்துக் கொள்ள வேண்டாம்
இவற்றிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் நம் மூளையை வெகுவாக பாதிக்கிறது என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்து உள்ளார்கள். எனவே இவற்றை படுக்கையிலிருந்து கூடுமான தொலைவில் வைத்துவிட்டு உறங்குங்கள். அடிக்கடி வாட்ஸாப் / முகநூல் போன்றவற்றை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நினைப்பை உதறுங்கள்.
- மாலையிலிருந்தே பானங்களைத் தவிருங்கள்
பானங்கள் என்றால் உற்சாக பானமான மது மட்டுமல்ல. டீ / காஃபி / கோக் / பெப்ஸி போன்றவைகளை அருந்துவதை மாலை 6 மணிக்கு மேல் செய்யாதீர்கள். இவற்றில் உள்ள காஃபின் (Caffeine) என்ற ஊக்கப் பொருள் மூளையை பாதிக்கும். அவற்றிலுள்ள சர்க்கரையும் உடலுக்கு ஒவ்வாதவை.
- வழக்கமான செயல்முறையை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
தினசரி வேலைகளை எந்தவிதமான தடையும் இல்லாமல் செய்துமுடிக்க உங்கள் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர வேளைக்கு உண்டு, வேளைக்கு உறங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இயற்கையை ஒருபோதும் மீற முயலாதீர்கள். அது விபரீதத்திற்கு வழியாகிவிடும்.
- தூங்கும் அறையின் தட்பவெப்பம்
இன்றைய நிலையில் ஏ.ஸி இல்லாத பெட்ரூம்கள் இல்லை என்றே சொல்லலாம். ஏ.ஸியின் குளிர்நிலை 24- 25* C இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதிக வெப்பமோ / மிகுந்த குளிரோ உடல்நிலையை நிச்சயம் பாதிக்கும்.
- உங்கள் உடலில் வைட்டமின் குறைபாடு
நாம் உண்ணும் உணவிலேயே நம் உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் அனைத்தும் கிடைப்பதால்,கூடுதலாக (மருத்துவர் ஆலோசனை இல்லாமல்) வைட்டமின் மாத்திரைகளையும், மற்ற ஹெல்த் supplements எனப்படும் பிற மருந்துகளையும் (இயற்கை /செயற்கை எதுவாக இருந்தாலும்) உட்கொள்வதைத் தவிருங்கள். ஒவ்வொருவர் உடலும்,ஆரோக்கியமும் வேறு வேறு என்பதை உணருங்கள். காய்கறியாகவோ / பழங்களாகவோ உட்கொள்வது நன்மை பயக்கும். நன்மை குறைவு என்றாலும் நிச்சயம் தீங்காகாது
- டிவி பார்ப்பதில் கட்டுப்பாடு
தினமும் குறைவான நேரம் மட்டுமே, அத்தியாவசியமான விஷயங்களை மட்டுமே டிவியில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய தினத்தில் டிவி சீரியல்கள் / டிவியில் செய்தி பார்ப்பது போன்றவற்றைக் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட விஷயங்களில் அக்கறை காட்டி, வாழ்வின் மகிழ்வான தருணங்களை அனுபவியுங்கள். மூளை முழுமையாக செயல்பட்டு, நாம் வாழ்க்கையில் முன்னேற இவை நிச்சயம் தேவை.
- ராம் ஸ்ரீதர்