ஒரு நிமிட யோகா

பகுதி - 1


வெ. கண்ணன், அலைபேசி: 94443 39976               


ஒரு நிமிடத்தில் யோகாவா? இது சாத்தியமா? என்ற வினா எழுவதில்  வியப்பொன்றுமில்லை. அன்றைய தினம் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபட்டதனால் மக்கள் உடல் பயிற்சிக்கு தனியாக நேரம் ஒதுக்கவில்லை என்றாலும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடின உழைப்பற்ற வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். நம் சந்ததியினருக்கும் அதையே கொடுக்க ஆசைப்படுகிறோம்.


ஆனால் உடல் நலத்துடன் வாழ சிறிதளவாவது உடல்- மனப் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்பதை எல்லோரும் அறிந்திருந்தாலும், காலை பரபரப்பான நேரத்தில் அதற்கெல்லாம் நேரம் இல்லை எனக் கூறி தன்  சோம்பேறித்தனத்தால் அதை தவிர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் கண்டதை தின்று, கண்டபடி வாழ்ந்து, உடல் பெருத்து, நோய்வாய்ப் படும்போது நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் என்று தேடி அலைகிறார்கள். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு அங்கு சென்று பயிற்சி செய்து பின்பு அதையும்  நிறுத்தி விடுகிறார்கள்.


 எதையுமே தினசரி செய்யாவிட்டால் முழுப்பலன் கிடைக்காது. எனவே தினசரி செயல்களான படுக்கையிலிருந்து எழுதல், மலம் கழித்தல், பல் துலக்குதல், குளித்தல், இறைவனைத் தொழுதல், உணவு உண்ணுதல் மீண்டும் படுக்கைக்கு செல்லும் வரையிலான செயல்களுக்கு இடையே ஒவ்வொரு நிமிடம் யோகா செய்யும் பயிற்சிகளையே இத்தொடர் விளக்குகிறது 


‘கலைகளில் தலையாயது வாழ்க்கைக் கலை’ - என்பார் காந்தியடிகள் அதைப் பற்றி அறிந்து கொள்வதே ஒவ்வொருவரின் முதல் கடமையாக இருக்க வேண்டும். அப்படி அரிய நல்லவழி, இயற்கை வாழ்வியல் ஆகும். அதைப் பற்றி நான் இங்கே வாழ்வியல் முகாம்களில், புத்தகங்களில், பெரியோர்களின் செவிவழிச் செய்திகளை அறிந்ததை நடைமுறைப் படுத்தி, நான் அடைந்த பலன்களை மற்றவர்களும் அறிந்து கொள்ளவே இத்தொடரை வழங்குகிறேன்.


 இன்றைய நாகரீக சமுதாயத்தில் பல மருத்துவ முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம், ஹோமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வேதம் முதலியனவை. இவை எல்லாமே நோயுற்றவர்களின் துன்பத்தை குறைக்க முயல்கின்றனவே தவிர, நோய்க்கு ஆளாகாமல் வாழ்வது எப்படி என்பதை மக்களுக்கு கற்பிப்பதோ, வழிகாட்டுவதோ, அறிவூட்டுவதோ - எதுவும் செய்யவதாக தெரியவில்லை.


 யோகா பயிற்சியினால் நான் அறிந்த உண்மைகளையும், அனுபவங்களையும், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்தத் தொடரை எழுதுகிறேன். அனைத்து புத்தகப்  பிரியர்களும், தமிழ் நெஞ்சங்களும், இளைஞர்களும் நமது யோகக் கலையை காலத்திற்கு ஏற்றபடி நம் அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து, உடலையும், மனதையும் சீர்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் எழுதுகிறேன். இந்தத் தொடரை அனைவரும் தொடர்ந்து முழுமையாக படித்து, பயிற்சி செய்து வாழ்க்கையில் பற்பல நன்மைகளை பெற எனது வாழ்த்துக்கள்.


ஒரு நிமிட யோகா (ஆசனங்கள்)

ஒவ்வொருவருக்கும் ஒரு நாளின் தொடக்கம் என்பது அவர்களுடைய படுக்கையில் இருந்துதான் தொடங்குகிறது. யாரும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது சட்டென்று எழுந்து விடுவதில்லை. மாறாக கண் விழித்தவுடன், குறைந்தது 5 நிமிடமாவது புரண்டு படுத்துதான் எழுந்திருக்கிறோம். ஆனால் ஒரு நிமிடத்தில் நான்கு ஆசனங்களுடன் எழுந்திருக்கும் போது உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்று அன்றைய தினம் உற்சாகமானதாக அமைகிறது.

பவனமுக்தாசனம்



முதலில் நாம் தூங்கி எழுந்திருக்கையில் எந்த நிலையில் படுத்திருந்தாலும், படத்தில் உள்ளது போல் பவனமுக்தாசனதிற்கு  வரவும். அதாவது கால்களை மடித்து தொடைகளை அடிவயிற்றில் வைத்து அழுத்தவும். தலையை தூக்க வேண்டாம். இப்பொழுது அடிவயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

மக்ராசனம்




அதன்பிறகு மக்ராசனம் (முதலை) என்னும் ஆசனத்திற்கு வரவும். இந்த ஆசனம் பல மணி நேரம் ஒரே நிலையில் படுத்திருந்ததினால் ஏற்படும் முதுகு வலியை போக்கும் மற்றும் இதயத்திற்கு மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். மிகவும் சுகமானதாக இருக்கும். இந்த ஆசனத்தில் எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கிடத்தல் வேண்டும். இல்லையேல் அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தூங்க வைத்து விடும்.


இதை நீங்கள் கட்டிலிலோ, மெத்தையிலோ அல்லது தரையில் பாயிலோ அல்லது எங்கு படுத்து இருந்தாலும், அதே இடத்தில் செய்யலாம். முதலில் முகத்தை தரையை பார்த்தவாறு குப்புற படுக்கவும். கால்கள் இரண்டையும் படத்தில் காட்டியவாறு ‘V’ வடிவில் விரிக்கவும். கைகள் இரண்டையும் தலைக்கு அடியில் வைத்து படுத்து கொள்ளவும். ஆழ்ந்த மூச்சு விட்டுக்கொண்டே, முதுகுத் தண்டு மற்றும் இதயம் சீராக இயங்குவதாக மனதில் எண்ணிக் கொள்ளவேண்டும். 15 வினாடிகள் அதே நிலையில் இருந்து விட்டு, அடுத்த நிலையான புஜங்காசனத்திற்கு  நல்ல பாம்பு படம் எடுக்கிறது போன்ற நிலைக்கு மாற வேண்டும்.


புஜங்காசனம்



இந்த ஆசனம் செய்வதனால் தைராய்டு கழுத்துப் பகுதியில் உள்ள சுரப்பி தூண்டி விடப்படுகிறது. இந்த தைராய்டு சுரப்பிதான் உடலின் எல்லா உறுப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. எனவே இந்த புஜங்காசனம் மிகவும் முக்கியமான பல நல்ல பலன்களை கொடுக்க வல்லது. முதுகுத்தண்டு விரிவடைவதால் எழுந்திருக்கும் போது ஏற்படும் முதுகுவலி ஏற்படுவதில்லை. கண்களை நன்றாக திறந்து மேலே பார்ப்பதனால் கண்பார்வை மேம்படும். மேலும், திரும்பவும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் வராமல் சுறுசுறுப்பாக எழுந்திருக்க வைக்கும். சர்க்கரை வியாதியை வரவிடாமல் தடுக்கவும் செய்கிறது. (எச்சரிக்கை: இந்த புஜங்காசனத்தை ஹெர்னியா என்று சொல்லப்படும் குடல் இறக்கத்தினால் அவதிப்படுகிறவர்கள் செய்யக்கூடாது).


சசாங்காசனம்


உள்ளங்கைகள்  இரண்டையும் புஜங்களுக்கு அருகே வைத்து அழுத்தி தலையை மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே மேலே தூக்கி கண்களை நன்றாக திறந்து முற்றத்தை பார்க்க வேண்டும். கால்கள் இரண்டும் படத்தில் உள்ளவாறு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். சாதாரண மூச்சில் 15 விநாடிகள் இருந்துவிட்டு, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே சசாங்காசனம் என்னும் முயல் ஆசனத்திற்கு மாறவும்.


 இந்த ஆசனம் செய்வதனால் இரத்த ஓட்டம் தலை பகுதிக்கு வருகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு இந்த நிலையில் படுத்துக் கொள்ள மிகவும் பிடிக்கும். குழந்தைகள் செய்யும் செயல்கள் நமக்கு பிடிப்பதில்லை. ஆனால் இயற்கையில் மனிதனும் ஒரு விலங்குதான். எனவே இந்த சசாங்காசனமானது ஆண், பெண் இன உறுப்புகள் சீராக செயல்பட வகை செய்கிறது. வயிற்று ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. இந்த நேரத்தில் அதே நிலையில் தன் தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகிய நால்வரும் தன்னை ஆசீர்வாதம் செய்வதாக பாவனை செய்து “இன்று புதிதாய் பிறந்தேன்” என்று நேற்று வரை நடந்ததை மறந்து, இன்றைய நாள் சிறப்பாக அமையும் என்ற தன்னம்பிக்கையுடன் மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களை மனதில் நிறுத்தி இன்றைய தினத்தை தொடங்குவோம்.


 இந்த இடத்தில் நாம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குறிப்பிடும் போது நாம் பிறந்து குழந்தைப் பருவத்தில் அறியாத வயதில் நம்மை பாதுகாத்து, நல்வழிப்படுத்திய (ஆரம்பப்பள்ளிகளில் நாம் படிக்கும்போது) அம்மா, அப்பா, ஆசிரியர் மற்றும் (தப்பு) தவறு செய்தால் இறைவன் நம்மை தண்டிப்பார் என்று பயந்து ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த தெய்வத்தை மனதில் கொள்ள வேண்டும். இந்த ஆசனத்தை கைகளை நகர்தாமல் அப்படியே உடலை மட்டும் பின்புறமாக இழுத்து குதி கால்களின் மேல் உட்கார வேண்டும்.


வஜ்ராசனம்

பிரத்யாஹாரம்


இந்த சசாங்காசனம் (முயல்) நிலையில் 15 விநாடிகள் இருந்துவிட்டு அப்படியே கைகளை பின் பக்கமாக நகர்த்தி முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி கால்களின் மேல் உட்கார வேண்டும்.


 இதுவே வஜ்ராசனம் ஆகும். வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள். உடல் வைரம் போன்று திடகாத்திரமாக அமையும். இந்த நிலையில் மேலும் 15 வினாடிகள் யோகாவில் பிரத்யாஹாரம் என்று சொல்லக்கூடிய ஐம்புலன்களையும் உள்வாங்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.


- அடுத்த பயிற்சி வரும் 14/01/2020 அன்று வெளிவரும்..... 


 


Popular posts from this blog

கொட்டிக்கிடக்கிறது வெட்டிவேரில் மகிமை

உமிழ் நீர் உயிர் நீர்