ஒரு நிமிட யோகா பகுதி 2
-வெ. கண்ணன், அலைபேசி: 94443 39976
தொடர் – 2
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும். -குறள் (131)
ஒருவனுக்கு என்றும் நீங்காத மேன்மையைத் தர வல்லது நல்லொழுக்கமேயாகும். எனவே அவ்வொழுக்கத்தைத் தன் உயிரை விட மேலாக மதித்து கடைபிடிக்க வேண்டும்.
இந்த பிரத்யாஹாரப் பயிற்சி உங்களுக்கு ஒழுக்கத்தை கடைபிடிக்க உதவியாக இருக்கும்.
அதாவது (கட்டை) பெருவிரல்களை காதுகளுக்குள் வைத்து இன்றைய தினம் தேவையில்லாத, புண்படுத்தக் கூடிய சொற்களை கேட்கமாட்டேன். அதையும் மீறி என் காதில் ஏதேனும் கேட்டாலும் அதை மிகைப்படுத்த மாட்டேன் என்று மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும். மேலும் ஆள்காட்டி விரல்கள் மற்றும் நடுவிரல்களால் கண்களை மூடி இன்றைய தினம் தேவையில்லாத காட்சிகளை பார்க்கமாட்டேன், அதையும் மீறி பார்த்தாலும் அதை .மிகைப்படுத்தி அதற்கு அடிமையாக மாட்டேன் என்று மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இரவு சீக்கிரமாக படுக்கைக்குச் சென்று கண்களுக்கு ஓய்வு கொடுப்பது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி, கைபேசி ,கணினி போன்ற உபகரணங்களை இரவில் வெகு நேரமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதன் பின் மோதிர விரலையும் சுண்டு விரலையும் வாயின் மீது வைத்து, இன்றைய தினம் தேவையில்லாத உணவை, கண்ட நேரத்தில் (குறிப்பாக பசிக்காமல்) பசி வந்தாலும் ருசிக்கு அடிமையாகி அளவுக்கு அதிகமாக சாப்பிட மாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும்.
இங்கு தேவையில்லாத உணவு என்பது, எதை பார்த்தவுடன் சாப்பிடத் தூண்டுகிறதோ, நம்மை அடிமைப்படுத்தி இருக்கிறதோ அவை எல்லாம் தேவையற்ற உணவுகளே. குறிப்பாக மைதாவினால் செய்த பஜ்ஜி, போண்டா, கேக், பிரியாணி மற்றும் பீட்சா எல்லா விதமான துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், காபி, டீ, பாக்கு, பான், குட்கா, பீர், பிராந்தி, விஸ்கி, சாராயம், எண்ணெயில் வறுத்த சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றை பார்த்தவுடன் பசி இல்லாவிட்டாலும் சாப்பிட, குடிக்கத் தூண்டும். அடிமைப்படுத்தும். ஆனால், பழங்கள், காய்கள், தானியங்கள், பருப்புகள், கீரைகள், தண்ணீர், இளநீர் நம்மை அடிமைப்படுத்தாது.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உனின் -குறள் (942)
ஒருவர் தான் சாப்பிட்ட உணவு நன்றாக செரிமானமாகும் அளவறிந்து சாப்பிட்டால் மருந்து என்ற ஒன்றும் வேண்டியதில்லை.
இறுதியாக தேவையில்லாத பேச்சை பேசி விவாதங்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும். அதையும் மீறி அவ்வாறு பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்வேன் என்று மனதிற்கு கட்டளை இடவேண்டும். இல்லையேல், கோபத்தில் பதிலுக்கு பதில் பழித்துப் பேசி, நீங்காத விரோதத்தை காலத்துக்கும் சுமக்க நேரிடும். இங்கு வள்ளுவரின்
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. -குறள் (129)
என்பதை நினைவில் கொள்ள வேண்டும் இதை நான் இவ்வளவு விரிவாக விவரித்து இருந்தாலும் இப்பயிற்சியை 15 நொடிகளில் செய்து முடிப்பதால், தினசரி நம்மை நாமே சரி செய்து கொள்ள முடிகிறது. மனம் செம்மை அடையும், கோபம் குறையும், உணவு ஒழுக்கம் ஏற்படும், பக்குவம் உள்ள மனிதனாக மாற முடியும். இவ்வுலகில் யாரும் யாரையும் திருத்த முடியாது. அவர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும். அதை இப்பயிற்சியின் மூலம் ஏற்படுத்த முடியும். இந்த பயிற்சியை நீங்கள் தினமும் செய்து வந்தால் மனமும், உடலும் ஆரோக்கியமாக மாறிவிடும்.
மொத்தத்தில் இந்த பயிற்சிகள் அனைத்தும் செய்ய ஒரு நிமிடம் மட்டுமே ஆகும். இப்பயிற்சியை வாழ்நாள் முழுவதும் இனி படுக்கையிலிருந்து எழும்போது இப்படித் தான் எழுந்திருப்பேன் என்று சபதம் எடுத்து வைராக்கியத்துடன் தினசரி செயல்படுத்த வேண்டும். அதாவது
பவனமுக்தாசனம் - 10 வினாடிகள்
மக்ராசனம் - 10 வினாடிகள்
புஜங்காசனம் - 10 வினாடிகள்
சசாங்காசனம் - 10 வினாடிகள்
பிரத்தியாகாரம் &
வஜ்ராசனம் - 20 வினாடிகள்
ஆக மொத்தம் 60 வினாடிகள் - ஒரு நிமிடம்.
காலையில் எழுந்தவுடன் முதலில் சிறுநீர் கழித்துவிட்டு, கை, கால், முகம் கழுவி ஏதாவது ஒரு அறையில் சன்னல் அல்லது கதவை திறந்து வைத்து, ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் அமர்ந்து கபாலபாதி என்னும் யோகப் பயிற்சியை செய்ய வேண்டும். அதாவது தும்முவது போன்று வேகமாக மூச்சை வெளியே விடவேண்டும். அதே நேரத்தில் அடி வயிற்றுப் பகுதி உள் செல்ல வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.
இந்த பயிற்சியை ஒரு நிமிடம் செய்திட தலையில் உள்ள எல்லா உறுப்புகளும் சுத்தமடைகின்றன. சுறுசுறுப்படைக்கின்றன. மூச்சு பாதையான மூக்குத் துவாரத்திலிருந்து, நுரையீரலைச் சென்றடையும் வரையிலான பாதையில் உள்ள அழுக்குகள், தூசிகள் வெளியேறி விடுகின்றன. சைனஸ், ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த வியாதிகளுக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்கும். வயிற்றை உள்வாங்கி பயிற்சி மேற்கொள்வதால் தொப்பை குறையும் சர்க்கரை வியாதிக்கு காரணமான கணையம் சிறப்பாக செயல்பட்டு அதிகப்படியான இன்சுலின் சுரக்கும். இப் பயிற்சி செய்யும் போது உதரவிதானம் நன்றாக இயங்குவதால் அதன் கீழ் உள்ள எல்லா செரிமான உள் உறுப்புகளும் பலமடைகின்றன.
ஆரம்பத்தில் 10 முறை செய்து ஒரு இடைவெளி விட்டு அடுத்து 10 முறை மீண்டும் ஒரு இடைவெளி விட்டு அடுத்து 10 முறை செய்ய வேண்டும். இம்முறை செய்வதற்கு ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலப்போக்கில் அதே ஒரு நிமிடத்தில் சற்று வேகத்தை கூட்டி ஒரு இடைவெளிக்கும் இன்னொரு இடைவெளிக்கும் இடையில் 40 முறை என செய்து 40x3=120 முறை "கபாலபாதி" செய்ய வேண்டும்.
- அடுத்த பயிற்சியை அடுத்த வாரம் தொடர்ந்து பார்ப்போம்…