மனம் வைத்தால் மாரடைப்பைக் கூட தடுக்கலாம்
நம் நாட்டில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பு நோய் தான் முக்கிய காரணம். அந்தக் காலத்தில் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு நோய் வந்தது. ஆனால், தற்போது இளம் வயதுக்காரர்களுக்கு மாரடைப்பு வந்துவிடுகிறது. இந்த நோய் ஆண்கள், பெண்கள் என்று பிரித்துப் பார்க்காமல் அனைவரையும் தாக்குகிறது. ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பின் போதும் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சக்தியையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை ரத்தக்குழாய்கள் மூலம் அனுப்புகிறது. இந்த குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு, முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் உருவாகின்றன. ஒரு சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுவதுமாக அடைத்து விடுகிறது. இதனால், இதயத்தின் தசைப்பகுதிக்கு சக்தியும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் இதயம் செயலிழக்கிறது இதுவே மாரடைப்பு ஆகும். பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. புகைப்பிடித்தல், கெட்ட கொழுப்பு அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ளுதல், உடலின் அதிக எடை, போதைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு...